பக்கம் எண் :

74கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

உன்னுருவே தோன்றுதடி

எண்சீர் விருத்தம்

உள்ளத்தில் படிந்துவிட்டாய் அழகுப் பாவாய்;
    உணர்வுடனே கலந்துவிட்டாய் தமிழின் பாட்டாய்;
கள்ளக்கண் பார்வையிலே சொக்கி விட்டேன்;
    கரைபுரண்டு வருகின்ற காத லாற்று
வெள்ளத்தில் புணையாவாய் என்றே உன்னை
    வேண்டியதை மறுத்தனையே! உயிர்நி லைக்கக்
கள்ளைத்தான் நம்பினும்அம் மதுநி றைந்த
    கைக்கிண்ணத் துன்னுருவே தோன்றக் கண்டேன்

கச்செதிர்க்கும் உன்மார்பு கலக்க வில்லை;
    காட்டுமலர்ச் சிரிப்புந்தான் அசைக்க வில்லை;
பச்சைமயில் சாயலுக்கும் பதைத்தே னல்லேன்;
    படியவைத்த துன்னிசையோ அன்றே; உன்றன்
இச்சைமிகும் பார்வையில்தான் கட்டுண் டேன்நான்
    என்னாசை மறுத்தனையே! என்றன் வாழ்வுக்
கச்சாணி அனையவளே! சோலை செல்லின்
    அங்கெல்லாம் உன்னுருவே தோன்றக் கண்டேன்

இனிக்கின்ற சிலம்பெடுத்தேன் கானற் பாட்டாய்
    இசைக்கின்றாய்! மாதவியாய் நடிக்கின் றாய்நீ!
கனிச்சாறே! சிலம்பொலியும் கேட்டு நின்றேன்
    காதலைநீ புறக்கணித்துச் செல்லல் நன்றோ?
உனக்கென்று கொலைப்பார்வை அமைந்த தோ?என்
    உயிர்வாழ மனமின்றி நஞ்செ டுத்துத்
தினச்சென்றேன் அதனிடத்தும் என்னை வாட்டும்
    செவ்விதழாய்! உன்னுருவே தோன்றக் கண்டேன். 3