பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்75

புதுமைப் பெண்

கலிவெண்பா

தோழி:-

என்னடி உன்முகம் இப்படி வெண்மையதாய்ச்
சின்னத் தனமும் சிறிதுநிலை மாறியதேன்?

உண்ணா துறங்கா திருப்பதுமேன்? என்னுயிரே!
கண்ணே! இதனுண்மைக் காரணத்தைச் செப்பாயோ?

தலைவி:-

நல்லபசி இல்லை நலமில்லை வேறொன்றும்
இல்லையடி என் அன்பே! இப்படி ஏன் வாட்டுகிறாய்?

தோழி:-

ஆமாம் நீ ஏனுரைப்பாய் அன்பில்லை என்னிடத்தே
ஏமாற்றுச் சொற்கள் இயம்புகிறாய் போய்வருவேன்

தலைவி:-

நில்லடி என்தோழி நேர்ந்ததையே சொல்லுகிறேன்
பல்லை விரித்துப் பரிகாசம் பண்ணாதே

நெஞ்சை ஒளித்ததொரு வஞ்சகம் இல்லைஎன்பார்
நெஞ்சம் நீயன்றோ நேரிழையே! தாயறியாச்

சூலுண்டோ? உண்மையைநான் சொல்லி விடுகின்றேன்
மாலுண்டேன் காதல் மதுவால் மனந்தளர்ந்தேன்