பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்77

ஊரார்

எண்சீர் விருத்தம்

வாழவிடார் சாகவிடார் வாழ்வில் ஓர்நாள்
    வகைகெட்டு வறுமையுறின் உதவ வாரார்;
ஏழைஎனில் எதுசெயினும் ஊரார் கூடி
    இதுகுறையாம் அதுகுறையாம் என்று நம்மைத்
தாழவுரைத் தின்புறுவர்; செல்வன் என்ன
    தகிடுதத்தம் செய்தாலும் தாளம் போட்டு
வாழவென்றே காக்கைபிடித் தலைவர் அந்தோ!
    வாழ்கின்றார் மனிதரெனும் பெயரும் தாங்கி

என்குடும்பக் காவியத்தில் இலங்கும் ஒவ்வோர்
    ஏடுகளைப் புரட்டுகிறேன் சிறிது கேண்மின்!
என்குடும்ப விளக்கினைநான் மணவா முன்னர்
    எழிலரசி அவளோடு களவொ ழுக்கம்
நன்மையென ஒழுகிவரும் நாளில், ஊரார்
    நவின்றவெலாம் புகல்வதெனில் பலநாள் ஆகும்;
வன்மைமிகு பழியுரைத்தார், பொய்கள் சொன்னார்.
    வகைவகையாய்த் தீமைகளை இழைத்தும் பார்த்தார்

நோய்வந்து பற்றியதால் சின்னாள் நங்கை
    நொந்துழன்று மிகமெலிந்து வெளியில் எங்கும்
போய்வந்து நடவாமல் இருந்தாள்; ஊரார்
    “பொல்லாத ஒழுக்கத்தாற் கருப்பம் உற்றாள்.
நோய்வந்த தெனச்சொல்லிக் கருவைக் கொன்றாள்.
    நூதனமாத் தற்கொலைக்கும் முயன்றாள்” என்று
வாய்வந்த படியெல்லாம் அளந்து விட்டார்.
    “வகையறியா தோடிவிட்டாள்” என்றும் சொன்னார்.