பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்81

இப்படியே இருபாலும் கோளே பேசி
    இணைந்திருந்த குடும்பத்திற் பகையை மூட்டித்
தப்பறியாக் கணவனுளம் நோகும் வண்ணம்
    சச்சரவே நிறைத்திடுவாள்; ஊரார் சொல்லை
அப்படியே நம்புவதால் விளையும் தொல்லை
    அளவிலவே ஆதலினால் ஆய்ந்து செய்து
தப்பெதுவும் நேராமல் அன்பாய் வாழ்ந்து
    தரணிபுகழ் மாமிமரு மகளாய் வாழ்வீர்

ஆண்டுபல ஆனாலும் நரையே யின்றி
    அழகுகெடா திளமையுடன் விளங்க வேண்டின்
பூண்டொழுகும் அன்படக்கம் அறிவு சால்பு
    பூணெனக்கொள் சான்றோராய் ஊரார் வாழ
வேண்டுமென எங்கள்பிசி ராந்தைப் பேரோன்
    விளம்பினனவ் வுரைபோற்றி மக்கட் பண்பு
தாண்டாமல் வாழ்ந்திடுக ஊரார் எல்லாம்;
    தழைத்திடுமே அன்புமகிழ் வின்பம் யாவும்! 17

(காரைக்குடி, கம்பன் திருநாள் கவியரங்கில் திரு. நாமக்கல் கவிஞர் தலைமையில் பாடப் பெற்ற பாடல்.)