82 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
பணியாள் வேண்டாம் எண்சீர் விருத்தம் குடும்பவிளக் கெனும்நூலைக் கொணர்க என்று குயில்மொழியை என்துணையைப் பாடு கென்றேன்; `விடும்அத்தான் அவ்வெண்ணம்; பக்கத் துள்ளோர் விரும்பவிலை நாம்சிரித்துப் பேசும் பேச்சை; சுடும்படியாச் சொல்கின்றார் எதிர்த்த வீட்டார்; துணைவரொடு சமமாகப் பழகல் கூடக் கொடுங்குணமென் றறைகின்றார் தெருவி லுள்ளார்; குடும்பமென்ன இருட்சிறையா’ என்று சொன்னாள் அடிபேதாய் ஊரார்கள் அப்ப டித்தான் ஆர்ப்பரிப்பர், அருகினில்வா! அவர்கட் காக மடிவதுவோ நமதின்பம்? அன்பும் சேர்ந்து மாள்வதுமோ? இலக்கணமே மொழியைக் காக்கும். அடிவேராம் அதுபோல்நம் குடும்பத் திற்கும் அன்பொன்றே அடிப்படையாம், பண்பும் ஆகும்; கடிவாளம் அறுந்தவர்தம் பேச்சைக் கேட்டுக் கடிந்துரையேல் அன்பென்னும் இலக்க ணத்தை. என்றுரைத்தேன்; `நன்றத்தான் இந்த ஊரார் இயல்பெனக்குப் பிடிக்கவில்லை, கோவி லுக்குச் சென்றிருந்தேன் குழாயடியில் நின்றி ருந்தேன் செழும்புனலில் நீராடச் சென்றேன் அங்கு நின்றிருந்த பேரெல்லாம் பிறர்கு டும்ப நினைவொன்றே கொண்டுகுறை கூறிக் காலம் கொன்றிடுவர், அப்பப்பா! நரைத்து மூத்துக் கோலூன்றும் கிழங்களுமா பேச வேண்டும்?’ |