பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்89

துடிதுடித் திருந்தேன்; துணைவரும் நானும்
புண்ணியத் தலங்கள் புக்குநீர் மூழ்கியும்
புண்ணியம் இல்லை; புதல்வற் பேறினி
உண்டோ என்றோம் உள்ளூர்க் கணியர்
ஏடுகள் புரட்டி இல்லை என்றார்;
இடிந்ததென் உள்ளம் இருண்டதென் வாழ்வு
மகப்பே றில்லா மலடோ அந்தோ!
எனச்சின் னாள்கள் ஏங்கி யிருந்தேன்.

திரைகடல் கடந்து செல்வந் திரட்டப்
பிரிந்தனர்; நானோ பெண்மையின் இயல்பால்
வருந்தி மெலிந்தேன்; வந்தனர் ஒருநாள்;
எழில்மணி மாட இருப்பில் இருந்தோம்,
குளிர்எனை அவர்பாற் கொண்டு சேர்த்தது,
நடுங்கிய என்றன் நாணம் காத்திடக்
கணியர் கூற்றைப் பொய்யெனக் காட்டிட
உள்ளம் நைக்கும் உறுதுயர் தீர்ந்திட
இன்பக் குளிர்நிலா இருள்முகில் நுழைந்த(து);
என்முகம் அவர்தம் மார்பிற் புதைந்தது;
மீண்டும் திங்கள் மேலெழுந் தொளிக்கதிர்
வீசிச் சிரித்தது; விடியலைக் கண்டோம்;

உணவு வெறுத்தேன் உமட்டலைக் கண்டேன்
புளிப்பில் விருப்பம் பூத்தது, வாழ்வில்
இனிப்பு மலர்ந்திட இன்பங் காய்த்தது
காதற் கனியைக் கண்டேன்
எண்ணம் பலித்த(து) இனியிலை துயரே. 46