90 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
குழந்தை இன்பம் எண்சீர் விருத்தம் “பாய்ந்தோடும் அருவிமலைப் பக்க மெல்லாம் பல்வண்ணப் பூக்களிலே மென்மைத் தென்றல் தோய்ந்தோடி வந்துடலில் வருடும் போது சொல்லரிய இன்பமன்றோ அருமை அத்தான்! ஆய்ந்தெடுத்த யாழெடுத்துப் பாடு கின்றேன் அருகினிலே வாருமதோ பாரும் வானில் வாய்ந்தொளிரும் வெண்ணிலவு கூட்டும் இன்பம்! வரம்புண்டோ?” என்றுரைத்தாள் துணைவி நல்லாள் வெண்முகில்சூழ் மலைமுகடும் முகட்டி னின்று வீழ்ந்ததிரும் அருவிகளும், வண்ணப் பூவால் கண்கவரும் செடிகொடியும், கொடிகள் தாவிக் காட்டுகின்ற மரத்தொகையும், தென்றற் காவில் பண்சொல்லும் வண்டுகளும், மாலை வானில் படர்கின்ற செந்நிறமும், காதல் நங்காய்! விண்மதியும் தருமின்பம் என்றன் பிள்ளை விளையாடும் காட்சிதரும் இன்பம் ஆமோ? ஆய்ந்தெடுத்த இசைவல்லார் செய்த வீணை ஆர்த்தெழுப்பும் இன்னொலியும், கானில் நன்கு காய்ந்திருக்கும் வேய்ங்குழலில் தோன்றும் பண்ணும், கடும்பாம்பும் மெய்மறந்து நிற்க இன்பம் தோய்ந்திருக்கும் படியூதும் சூழலும், இன்னும் துன்பமெலாம் துடைக்குமிசைக் கருவி யாவும் பாய்ந்தளிக்கும் இன்பமெலாம் என்றன் பிள்ளை பரிந்துளரும் மழலைதரும் இன்பம் ஆமோ? |