“அப்படித்தான் சொல்லிடுவீர்! மாடி மீதில் அன்றொருநாள் குறுந்தொகைப்பாட் டொன்று சொல்லி ஒப்புண்டோ இதற்கென்றீர்! அதனோ டென்னை உவமித்துக் கேலிசெய்தீர்! உண்ண வாரும் எப்பொழுதும் இதுதானா? என்றால் நூலில் எழும்சுவையால் சுவையுணவை மறந்தேன் என்பீர்! எப்பொழுதே னும்விளக்கை அணைக்க வந்தால் இருஇருநூல் இன்பம்உயர் வென்பீர் அத்தான்!” “நானூற்றுப் புறப்பாடல் சொல்லு கின்ற நம்முன்னோர் செய்தபெரும் வீரப் போரும் தேனூற்றோ எனக்கருதும் அகநா னூறு செய்யகுறுந் தொகைகூறும் காதல் வாழ்வும் கால்நூற்றோ டைந்தாண்டின் அகவை யில்யான் கண்டசில காவியமும் தந்த இன்பம் மானோட்டும் விழியுடைய கண்ணே! என்றன் மகவுதரும் இன்பத்திற் கீட தாமோ?” “போகட்டும்; இசைபாடி அணையின் மீது புகழ்ந்தீரே நானின்பம் தந்த போது! வேகட்டும் உணவென்றால் சேலை பற்றி விளையாடிப் பெற்றீரே அந்த இன்பம், வேகத்தோ டென்னிதழைச் சுவைக்கும் போது விளைந்தசுகம் எப்படியோ? சொல்வீர்?” என்றாள்; ஆகட்டும் எனச்சொல்லி அவள்கை பற்றி அருகிருத்தி உயிர்க்கொழுந்தே! மஞ்சம் ஏறி நரம்பேறும் யாழ்மீட்டிக் காதல் கூட்டி நல்லிசையால் மகிழ்வூட்டி இருக்கும் போதும் மரஞ்சேர்ந்த மாதுளைபோல் தோன்றும் உன்றன் மார்பகத்தால் பேரின்பம் தந்த போதும் சுரந்தூறும் உன்இதழைச் சுவைக்கும்போதும் சொல்லரிய இன்பத்தைக் காணு கின்றேன் இருந்தாலும் என்குழந்தை மெய்யில் தாவி இளங்கையால் தொடுகின்ற இன்பம் ஆமோ? |