பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்93

தோற்றுவிட்டேன்!

தாழிசைகள்

போர்க்களத்தில் எதிர்நிற்க எவருங் காணேன்
    பூரித்தேன் வீரத்தாற் செருக்குங் கொண்டேன்
தார்க்கழுத்தில் வன்புயத்தில் முகத்தில் எங்கும்
    தளிரடியால் எனைமிதித்தாய் தோற்று விட்டேன்

இசைத்தமிழில் எனைப்போலப் பாடு தற்கே
    எவருமிலர் எனக்கருவம் பூண்டி ருந்தேன்
வசைக்கிலக்கே ஆகினேன்ஒப் பில்லா நின்றன்
    வாய்மழலைத் தேனிசைக்குத் தோற்று விட்டேன்

ஈரமொரு சிறிதுமிலேன் வலிய நெஞ்சேன்
    எவர்பாலும் கருணைமொழி புகலேன் அன்பின்
ஓரமதுங் கண்டறியேன் மறம னத்தேன்
    உன்விழியால் மனமுருக்கி வென்று கொண்டாய்

பணிவறியேன் அடக்கமிலேன் சான்றோர் என்பாற்
    பகருமொழி மதித்தறியேன் வலிய னேனும்
பணிகின்றேன் உன்முன்பு நின்மொ ழிக்குப்
    படிகின்றேன் என்மதலாய்! தோற்று விட்டேன்

உன்தாயின் விழிக்கடைக்கோர் ஒப்பே யில்லை
    உலகிலென நினைந்திருந்தேன் களிப்புங்கொண்டேன்
என்வாயை அடைத்துவிட்டாய் கவலை தோயா
    எழில்மலருன் கருவிழியால் தோற்று விட்டேன்

இலக்கணநூல் இலக்கியநூல் நிகண்டு யாவும்
    எளிதாகக் கற்றுணர்ந்தேன் பெருமை கொண்டேன்
சொலக்கருதி நாஉந்த இதழின் ஓரம்
    சுழல்மழலைப் பொருள்தேறேன் தோற்றுவிட்டேன்

எழுதரிய ஓவியமே! என்றன் நெஞ்சில்
    எழுந்துநடம் செயுந்தேவே! எங்கள் காதற்
பழந்தந்த சுவையே!எப் படியோ என்னைப்
    பணிவித்து நல்லாட்சி செலுத்து கின்றாய்! 7