பக்கம் எண் :

94கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

எம்மவர் தந்தார்

நிலைமண்டில ஆசிரியப்பா

மாலைப் பொழுதில் மங்கிய ஒளியில்
வேலை முடித்து விரிகதிர்ச் செல்வன்
மறைந்தனன்; என்னை மணந்தவர் வந்தார்
கரைந்திடு புள்ளினம் கண்ணயர்ந் திருந்தன;
மேலுயர் மாடம் மீதினில் ஓரறை;
பாலொளி சிந்தப் பார்த்தது நிலவு;
பஞ்சணை அமர்ந்தேன் பக்கத் தமர்ந்தார்
அஞ்சன விழியை அவர்பாற் செலுத்தினென்;
பசியோ டிருந்தவர் பாய்ந்து வந்தெனை
அசைய விடாமல் அள்ளி விழுங்கினார்;
இன்பக் கடலுள் இருமீன் ஆயினம்!
அன்பில் திளைக்கும் அந்நல் வேளை
மின்விடு விளக்கொளி மெல்லென அசையச்
சன்னல் வழியே சார்ந்தனை தென்றால்!
உள்ளமும் உடலும் சிலிர்த்தன; காதற்
கள்ளுண் டின்பக் கற்பனை உலகில்
இருந்திடும் எம்மை மறந்திடச் செய்தனை!
பறந்தனம் விண்ணிற் பறவைக ளாகி;
இந்த விதம்பல இரவுகள் கழிந்தன;
அந்தநன் னாளெலாம் இன்பமீந் தனையால்
நல்லை நல்லைஎன நவின்றேன் பலகால்;
இன்றோ துணைவர் ஈங்கிலர், அதனாற்
கொன்றா லன்ன கொடுந்துயர் தந்தனை!
நல்லை அல்லைஎன நன்குணர்ந் தேனே;
கூர்ந்து நோக்கின் குற்றம்நீ புரிந்திலை;
சேர்ந்தவர் பிரிந்தார் செய்தனர் துன்பம்
அதற்கென் செய்குவை? ஆய்ந்து பார்க்கின்
நல்லையும் அல்லை அல்லையும் அல்லை
“தீதும் நன்றும் பிறர்தர வாரா”
எனவாங்கு
ஓதிய பொருண்மை உணர்ந்தேன் இன்றே
இரண்டும் ஒருங்கே எம்மவர் தந்தார்;
ஒருகுண மில்லாய் ஏகுதி நீயே! 32