பக்கம் எண் :

108கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

74
உள்ளமும் உதடும்
-

உள்ளமும் புகழும் உதடும் புகழும்
    உண்மை உணர்ந்திட வேண்டுமடா
கள்ளம் எதுவென உள்ளம் எதுவெனக்
    கண்டு தெளிந்திட வேண்டுமடா

நல்லவர் வருவார் அல்லவர் வருவார்
    நன்மைகள் பெறலாம் எனத்தேடிச்
சொல்லிடும் புகழ்மொழி சொக்கிட வைத்திடும்
    சோதனை செய்திட வேண்டுமடா

உண்மையும் உண்டாம் பொய்ம்மையும் உண்டாம்
    உன்புகழ் பாடும் பாடலிலே
உண்மையும் பொய்ம்மையும் ஓர்ந்து தெளிந்திடும்
    உள்ளம் உனக்கே வேண்டுமடா

நேற்றுனை வைதார் இன்றுனைப் புகழ்வார்
    நிலைமையை எண்ணிப் பார்த்திடடா
காற்றுள போதே தூற்றிட வந்தார்
    காரணம் இதுதான் கண்டிடடா

எட்டியின் கனிகள் இருவிழி கவரும்
    எழிலினைக் கொண்டுள தறிந்திடடா
கட்டிய புனைமொழி கேட்டிடும் போது
    காதுகள் குளிர்ந்திடும் தெரிந்திடடா