110 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
75 மீண்டும் வருமோ? - கண்பழு தாகினுங் காணலாம் - உலகைக் காணுங் கருவியைப் பூணலாம் பண்புகள் பாழ்பட நேருமேல் - என்ன பக்குவஞ் செய்யினுந் தீருமோ? உண்ணும் உணவுகள் மாறுமேல் - வேறோர் உண்டி தனைக்கொண்டு தேறலாம் எண்ணும் நினைவுகள் மாறுமேல் - பாரில் எப்படி உயர்ந்திட லாகுமோ? பள்ளம் படுகுழி வீழ்ந்தவன் - வந்து பார்த்தவன் கைதர மீளலாம் உள்ளம் படுகுழி வீழுமேல் - பின்னர் ஓங்கிய வாழ்வினில் மீளுமோ? நஞ்சினை உண்டொரு மாந்தனும் - உய்ந்து நானில வாழ்வினை ஏந்தலாம் நெஞ்சகம் வஞ்சனை உண்ணுமேல் - வாழ்வு நேர்மையிற் சென்றிட ஒண்ணுமோ? மந்தையில் மேய்ந்திடும் மாடுகள் - வந்து மாலையில் வீட்டினைக் கூடலாம் சிந்தை மேய்ந்திடப் போகுமேல் - வந்து சேரிடம் எய்திடல் ஆகுமோ? |