பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)123

4
எப்படிப் பொறுப்பேன்!

இருளுடன் ஒளியையுங் காண்பேன் - உலகின்
    இயல்பெனும் மனநிலை பூண்பேன்
வறுமையும் வளமையுங் கண்டால் - மாந்தன்
    வாழ்வினில் எப்படிப் பொறுப்பேன்?

மருதமும் பாலையும் உண்டு - விடுவேன்
    மண்மிசை இயல்பெனக் கொண்டு
உரியவன் எளியவன் இருத்தல் - இயல்பென்
    றுரைத்திடின் எப்படிப் பொறுப்பேன்?

தடமலை சமதரை இருக்கும் - அவையும்
    தரைதனில் இயல்பென இருப்பேன்
குடிலுடன் மாளிகை இருப்பின் - நெஞ்சம்
    குமுறா தெப்படி யிருக்கும்?

பூவுடன் பிஞ்சுகள் மடியும் - அஃதும்
    பூமியில் இயல்பென முடியும்
சாவுகள் இளமையைத் தொடரின் - உள்ளம்
    சமநிலை எப்படி யடையும்?

மலர்தனிற் பனிநீர் குந்தும் - அதுதான்
    மனமகிழ் அழகினைச் சிந்தும்
உலரிய விழிநீர் சிந்தின் - என்றன்
    உளமோ கடலெனப் பொங்கும்