பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)129

7
எனது நேரம்

நினைவுடன் வாழ்வது சிலவேளை-கனவில்
    நீந்திடப் போவது பலவேளை
முனைவுடன் வாழ்வது சிலவேளை-துயரங்
    மூழ்கிடத் தாழ்வது பலவேளை

நட்பில் திளைப்பது சிலவேளை -தனியே
    நலிந்து கிடப்பது பலவேளை
கற்பில்* களிப்பது சிலவேளை - துயரங்
    கண்டு கழிப்பது பலவேளை

சிரிப்பினில் வாழ்வது சிலபோது-கண்ணீர்
    சிந்தித் தேய்வது பலபோது
நெருப்பினில் காய்வது பலபோது-இன்பம்
    நெஞ்சினில் தோய்வது சிலபோது

நல்லன காண்பது சிலபோது-நாட்டில்
    நாணயங் காண்பது சிலபோது
அல்லன தோன்றுதல் பலபோது-மண்ணில்
    அல்லலுந் தோன்றுதல் பலபோது

என்னலம் நெஞ்சினில் ஒருநாளே-மக்கள்
    இனநலம் மிஞ்சிடும் பலநாளே
என்னகம் வஞ்சியும் ஒருநாளே-நினைவில்
    ஏழையர் பஞ்சையர் பலநாளே


* கற்பில் - படிப்பில்