8 உயிர்த் தமிழே! - முன்னைப் பழம் பொருளே-வேந்தர் மூவர் உயிர்த் தமிழே! கன்னற் சுவை யமுதே-என்றன் கண்ணின் மணி விளக்கே! என்னைப் பழிப்பவனை-நான் ஏதும் நினைப்பதில்லை உன்னைப் பழிப்பவனைப்-பகையா உள்ளம் நினைக்கு தம்மா! தீங்குனைச் சாரு தென்றால்-என்றன் சிந்தை கொதிக்கு தம்மா! பாங்குனை மேவு தென்றால்-நெஞ்சம் பாய்ந்து மகிழு தம்மா! ஆங்கிலம் கற்றவரும்-வந்த அயல்மொழி கற்றவரும் ஈங்குப் புறக்கணித்தார்-அறிவை என்று பெறுவாரோ? தாயைப் பழித்துரைத்தால்-நெஞ்சம் தாங்கிட ஒப்பவில்லை நாயவன் என்றுமிழ-உணர்வு நாடிப் பெருகுதம்மா! |