136 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
12 நானே அரசிருப்பேன் மருவிய முகிலாய்த் தவழ்ந்திடுவேன்- மலைமேல் மழையாய்ப் பொழிந்திடுவேன் அருவியின் உருவாய்த் திகழ்ந்திடுவேன் ஆறென உலகில் நுழைந்திடுவேன் வயல்தனில் புனலாய்ப் பாய்ந்திடுவேன் வண்டலுந் துணையாத் தோய்ந்திடுவேன் பயிரென விளைந்தே சாய்ந்திடுவேன் பசிதனைப் புவியில் காய்ந்திடுவேன் உலகினில் எங்கணும் ஓடிடுவேன் ஒவ்வொரு மண்ணையும் நாடிடுவேன் கலகல எனுமிசை பாடிடுவேன் கடலுள் முடிவிற் கூடிடுவேன் கனிகளின் உருவில் தொங்கிடுவேன் கனியுள் சுவையாய்த் தங்கிடுவேன் இனியநல் லிளநீர்த் தெங்கினிலே இன்பம் மிகவே பொங்கிடுவேன் ஏரியுங் குளமும் நிறைந்திருப்பேன் எளிதே மணலுள் மறைந்திருப்பேன் ஊரவர் தொடத்தொடச் சுரந்திருப்பேன் உலகஞ் செழித்திட வரங்கொடுப்பேன் மழலையின் இதழில் துடிதுடிப்பேன் மகளிரின் விழியுள் குடியிருப்பேன் அழகிய சோலையில் கொடிபிடிப்பேன் அவனியில் நானே அரசிருப்பேன் |