பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)139

14
ஒற்றுமையா? ஒருமைப்பாடா?

ஒற்றுமை என்றொரு சொல்லுண்டு-மேலும்
    ஒருமைப் பாடென ஒன்றுண்டு
சற்றே அவற்றின் பொருள் கண்டு-நின்பால்
    சாற்றிடுவேன்கேள் மனங்கொண்டு

கட்டிய மாலைகள் தொங்கும்பார்-அவற்றில்
    கண்கவர் பூக்கள்வி ளங்கும்பார்
மொட்டுடன் முல்லைது லங்கும்பார்-இன்னும்
    மூவகைப் பூவுமி லங்கும் பார்

எத்தனை எத்தனை வண்ணம்பார்-நெஞ்சில்
    இன்பம் விளைந்திடப் பண்ணும்பார்
அத்தனை அத்தனை வண்ணப்பூ-மாலை
    ஆகிடச் சேர்ந்ததை எண்ணிப்பார்

மாலையிற் சேர்ந்தவை நின்றாலும்-தத்தம்
    மணத்தோ டுறுபெயர் குன்றாமல்
கோலமு றத்தொடர்ந் தொன்றாகும்-இதுவே
    கொண்டிடும் ஒற்றுமை என்றாகும்

பாலொடு சர்க்கரை ஒன்றானால்-நாமும்
    பருகிட வேசுவை நன்றாகும்
பாலிடு சர்க்கரை என்னாகும்?-வடிவும்
    பண்டைய பேரதும் இன்றாகும்