| பாடுங்குயில் (பாடல்கள்) | 147 |
18 நமக்குத் தொழில் பாடல் பொழிந்திடும் என்வாயை-பள்ளிப் பாடம் மொழிந்திட வைத்தாயே! கூடும் முகில்வான் மிதப்பேனைப்-பள்ளிக் கூடச் சிறையுள் வதைத்தாயே! காலங் கடந்துல காள்வேன்நான்-கடிகைக் காலங் கணக்கிட வாழ்வேனோ? ஞாலம் புகழ்ந்திட வாழ்வேன்நான்-சிறுவர் நாவிற் படமனந் தாழ்வேனோ? கற்பனை வானில் பறப்பேனா? -பாழுங் கட்டுரைத் தாள்கள் திறப்பேனா? பொற்புள பாமலர் பறிப்பேனா? - பற்றாப் பொருள்தனை எண்ணிச் சிரிப்பேனா? செம்மை வளர்த்துல காக்குவனோ? - பொழுதைச் *செம்மை தெளித்தினும் போக்குவனோ? மும்மைத் தமிழ்தனை ஊக்குவனோ?-என்றன் மூச்சைப் பழுதுற நீக்குவனோ? நாட்டை வளர்த்திட வேவந்தேன்-வாழ்வின் நன்மை தளர்ந்திட வேநொந்தேன் நாட்டை மறந்திடும் பாவந்தான்-அங்கே நாடக மாடுவ தேகண்டேன்
*செம்மை தெளித்து - சிவப்புமை தெளித்து |