பக்கம் எண் :

158கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

ஆட்சியில் ஏறி அறநெறி காப்போர்
    ஆசையில் தவறுகள் இழைத்தா லென்ன
மாட்சிமை அறியா வஞ்சகர் கூடி
    மற்றவர் பொருளைப் பறித்தா லென்ன

குற்றங் குற்றந்தான்-ஒரு
சட்டஞ் சட்டந்தான்

கற்றவர் என்போர் கயமைகள் யாவும்
    கலைஎனும் பேரால் செய்தா லென்ன
மற்றவர் இங்கே மடமைகள் யாவும்
    வயிறெனும் பேரால் செய்தா லென்ன

குற்றங் குற்றந்தான்-ஒரு
சட்டஞ் சட்டந்தான்

வெள்ளியி லான விளக்கது கொண்டு
    வேய்ந்திடுங் கூரையில் வைத்தா லென்ன
கொள்ளிக ளான விறகினைக் கொண்டு
    குடிசையில் நெருப்பினை வைத்தா லென்ன

குற்றங் குற்றந்தான் -ஒரு
சட்டஞ் சட்டந்தான்

கன்னியர் தவறின் கண்டனம் வேறு
    காளையர் பிறழ்ந்தால் அதன்பெயர் வேறா?
இந்நிலை கண்டார் அறமென ஓதார்
    இழிசெயல் ஒன்றினை யார்செய் தாலும்

குற்றங் குற்றந்தான்-ஒரு
சட்டஞ் சட்டந்தான்

1.2.1974