பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)163

27
இளைஞர்களே கேளுங்கள்

இளையவரே ஒன்று கேளுங்கள்-சொல்லும்
    என்மொழி கேட்டே வாழுங்கள்
பழகிட என்முன் வாருங்கள்-நல்ல
    பண்புடன் நீர்முன் னேறுங்கள்

கலைகளைக் கற்றே தேருங்கள்-அங்கே
    கற்பதை வாழ்விற் சேருங்கள்
நிலைகளை இங்கே பாருங்கள்-கையை
    நெஞ்சினில் வைத்தே கூறுங்கள்

அரசியற் பாடம் போற்றுங்கள்-போற்றி
    அறிவினை நெஞ்சில் ஏற்றுங்கள்
அரசியற் போரில் நாட்டங்கள்-செல்லின்
    அய்யோ சூழும் வாட்டங்கள்

உடைகளைச் சற்றே மாற்றுங்கள்-நாட்டின்
    உடைமைகள் எல்லாம் போற்றுங்கள்
கடமையைச் செய்தே காட்டுங்கள்-கெட்ட
    கயமையைத் தூவென் றோட்டுங்கள்

பொதுவிடம் நீங்கள் செல்லுங்கால்-செய்யும்
    புன்செயல் யாவுந் தள்ளுங்கள்
எதுசரி என்றே சொல்லுங்கள்-பின்னர்
    எவ்வழி நன்றோ செல்லுங்கள்