பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)165

28
துயரக் கவி

குரல்மறந்த குயிலானான்-நீந்தும்
    குளமிழந்த கயலானான்
இறகொடிந்த மயிலானான்-வாழ்வில்
    இடருழந்தே மயலானான்

ஒலியிழந்த மணியானான்-பார்வை
    ஒளிமறைந்த விழியானான்
கலிமிகுந்த துயராலே-பாவம்
    களைதுறந்த முகமானான்

முகில்படர்ந்த நிலவானான்-தூசு
    முழுதடைந்த சிலையானான்
துகில்வளைந்த படமானால்-சோகச்
    சுவரெழுந்த மனையானான்

துயர்படர்ந்த கவியானான்-இன்பச்
    சுவைமறந்த கலையானான்
புயலெழுந்த புவியானான்-துன்பப்
    புகைபுகுந்த விழியானான்

நரம்பறுந்த யாழானான்-போரின்
    நடுவொடிந்த வாளானான்
சுரும்பிருந்தே சூழாமல்-தேனின்
    துளியிழந்த பூவானான்

கவிபொழிந்த முகிலம்மா-பாடற்
    கனிமிகுந்த பலவம்மா
தவிதவிக்க விடினம்மா-யார்தான்
    தலைவனுக்குப் புகலம்மா?

12.9.1975