பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)169

31
ஏறு முன்னேறு

உழைப்புக்கு நல்லதோர் காலம்-வந்தால்
    ஓங்கிவ ளர்ந்திடு மேயிந்த ஞாலம்
பிழைப்புக்குப் போடாதே தாளம்-சென்று
    பின்பாட்டுக் கூட்டத்தில் பாடாதே மேலும்

தன்மானம் ஒன்றையே நாடு-பெற்ற
    தாயகந் தானுனக் கெப்போதும் வீடு
எந்நாளும் பாட்டாளி யோடு-கூடி
    எங்கெங்குந் தோளேற்றிப் படவேண்டும் பாடு

எங்கெங்குக் காணினுந் தேம்பல்-மக்கள்
    எவ்வெவர் வாழ்விலும் இன்பங்கள் கூம்பல்
பொங்கிப்ப டர்ந்திடும் சோம்பல்-கொண்டு
    போற்றிவ ளர்த்ததால் வந்ததித் தீம்பு

சோம்பலை மாய்த்திடல் வேண்டும்-நின்றன்
    தோளில்உ ழைப்பினைச் சேர்த்திடல் வேண்டும்
மாம்பழக் கொட்டையைத் தோண்டி-நட்டு
    மாஞ்செடி தந்திடும் மந்திரம் வேண்டாம்

உன்னை உழைப்பினை நம்பு-யாரோ
    ஓதிய வேதத்தை நம்பினால் வம்பு
பொன்னை வளர்த்திடுந் தெம்பு-நாட்டிற்
    பூத்துக் குலுங்கிட நாடிக் கிளம்பு

ஆலைத் தொழில்புரிந் தாலும்-பள்ளி
    ஆசிரி யப்பணி ஏற்றிருந் தாலும்
சீலைத் தொழில்புரிந் தாலும்-எங்கும்
    சீருடன் நின்கடன் ஆற்றுக நாளும்