| பாடுங்குயில் (பாடல்கள்) | 171 |
32 மலர் தந்த பாடம் அரும்பிச் சிரிக்குஞ் சிறுமலரே-நெஞ்சை அள்ளிக் கவரும் எழிலுருவே விரும்பிக் கிடக்கும் எனதுளமே-நின்பால் வீசும் மணமும் நுகர்வுறவே இதழை விரித்தே நகைபுரிவாய்-வண்டோ ஏழிசை பாடச் சுவைதருவாய் புதுமைப் பொலிவால் நலந்தருவாய்-மாதர் போற்றிப் புகழும் நிலைபெறுவாய் விரியும் இதழில் சிறுபணிகள்-காலை வீழும் பொழுதில் பெறுமழகு பரிதிக் கதிரால் மெருகுபெற-நின்னைப் பார்த்துக் களிப்பேன் இருவிழியால் உருவாய் வருங்கால் அரும்பென்பார்-நின்றன் உடலோ பருத்தால் போதென்பார் சிறிதே விரிந்தால் மலரென்பார்-கீழே சிதறி விழுந்தால் *வீஎன்பார் உலகில் பிறந்தாய் மணந்தந்தாய்-மாதர் உள்ளம் மகிழத் துணைநின்றாய் இலகும் எழிலைப் பிரிகின்றாய்-வாடி எங்கோ-தரையில் உதிர்கின்றாய்
* வீ - வாடி விழும் மலர் |