பக்கம் எண் :

172கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

‘இருக்கும் பொழுதில் பிறர்மகிழ-உன்னால்
    இயலும் வகையால் உதவிடுக’
குறிப்பு மொழியால் அறிவுரையை-என்பால்
    கூறி முடித்தாய் நினதுயிரை

அழகும் மணமும் நிலையலவே-பாரில்
    ஆடி யடங்கும் முறையுளதே
குழையும் மனத்தில் அருள்பெறுவேன்-மக்கள்
    குலமே உயர உதவிடுவேன்

குளிரும் மலரே ஒருமொழியை-உன்பால்
    கூற நினைத்தேன் செவிவழியே
தளரும் நிலைதான் வருபொழுதும்-மாந்தர்
    தமக்கே கொடுப்பேன் எனதுயிரை.

4.10.1975