பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)173

33
அவன் கண்ட பலன்

சாற்றுக் கரும்பது தோற்றுப் பிறக்கிடச்
    சாற்றுகி றான் கவிதை-வீட்டில்
சோற்றுப் பருக்கையை ஆக்கிப் படைத்திடச்
    சுற்றுகி றாள் மனைவி

நூற்றுக் கொடுத்திடும் பாட்டுப் புனைந்துபல்
    நூற்றினும் மேல் தருவான்-அந்தோ
‘நேற்றுத் துவைத்தது மாற்றுத் துணியிலை’
    நேரிழை யாள் பகர்வாள்

கண்டு வியந்திடக் கட்டி முடித்தனன்
    கற்பனையால் மனையே-அந்தப்
பெண்டு மயங்கிடப் பிள்ளை சுருண்டிடப்
    பெற்றனன் சோ தனையே

உண்டு களித்திட ஊருக் களித்தனன்
    ஒப்பறு பா வமுதே-அந்தத்
தொண்டு மனத்தவன் கண்டு சுவைத்தது
    தொல்லையின் வாழ் வதுவே

பாடிக் கொடுத்தவன் சூடக் கொடுத்தனன்
    பைந்தமிழ்ப் பா மலரே-உள்ளம்
வாடிக் கிடந்தனன் வாழ்விற் கலங்கினன்
    வண்டமிழ்ப் பா வலனே