பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)175

34
எல்லாம் கலப்படம்

உண்பொருள் எல்லாங் கலப்படம்-பேசும்
    உண்மையில் பொய்யுங் கலப்படம்
கண்படும் யாவுங் கலப்படம்-இங்கே
    கண்ணியம் எங்கே உருப்படும்?

பண்புகள் எல்லாங் கலப்படம்-எண்ணிப்
    பார்ப்பவர் நெஞ்சில் புலப்படும்
மண்படும் எண்ணெய் கலப்படம்-வஞ்சர்
    மண்டையில் கூடக் கலப்படம்

செந்தமிழ்ப் பாட்டில் கலப்படம்-நெஞ்சில்
    சிந்தனை பேச்சில் கலப்படம்
சந்தனப் பூச்சில் கலப்படம்-கோவில்
    சாமிகள் கூடக் கலப்படம்

நெய்திடும் நூலில் கலப்படம்-நல்ல
    நெய்தரும் பாலில் கலப்படம்
செய்தொழில் யாவுங் கலப்படம்-கள்வர்
    செய்கையின் பேரே கலப்படம்

வாணிகர் வேலை கலப்படம்-இங்கே
    வள்ளலில் கூடக் கலப்படம்
தோணிகள் ஏறுங் கலப்படம்-நாட்டின்
    தூயநல் மானம் புறப்படும்