பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)177

35
கலையாம்! தொழிலாம்!

திரைப்படம் என்றொரு தொழிலாம்-மாதர்
மறைப்பிடம் என்பதங் கிலையாம்!
உருப்படு மாஎனிற் கலையாம்!-ஐயோ
உரைத்திடின் மானமும் விலையாம்!

கடைத்தொழில் உண்டெனில் அதுதான்-காசு
கிடைத்திடச் செய்வதும் அதுதான்
புடைத்தெடுத் தாலது உமிதான்-நெஞ்சைக்
கெடுத்திடச் செய்திடும் மதுதான்

பதுக்கலைக் காட்டிடும் கதையாம்-அங்கே
பிதுக்கிய மாதரின் சதைதான்
புதுக்கலை என்றொரு விதமாம்-பண்பைப்
புதைத்திட வந்திடும் சதிதான்

நெறிப்படும் போக்கினில் இலையே-காம
வெறிப்பட ஆக்கிடும் வலையே
சரிப்பட செய்பவர் இலையே-பண்பை
முறித்திடச் செய்வதொர் கலையோ?

துணிந்திடும் மாதரும் உருள்வார்-கட்டிப்
பிணைந்தவர் போதையில் புரள்வார்
அணைந்திடில் தான்புகழ் வருமாம்-அந்தோ!
அணைந்தது பெண்மையும் பொருளால்