பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)187

42
தேன் கூடு

(தமிழ்நாட்டு அமைச்சரவை கலைக்கப்பட்டபோது பாடியது)

தென்மலைச் சாரலில் தேன்நிறை கூடு-கட்டத்
தேன்சுரும் பாயிரம் பட்டன பாடு
பொன்மலை மீதினில் பூமலர்க் காடு-முற்றும்
போய்வந்து தேன்மிக தேக்கிய வீடு

புன்மனப் பிள்ளையர் கண்டழுக் காறு-கொண்டு
பொங்கினர் வீசினர் வீண்மணற் சேறு
நன்மன வண்டுகள் கொண்டன வீறு-சென்று
நாண்மலர் தேடின நாடொறும் நூறு

ஆயிரம் சூழ்ச்சிகள் செய்தனர் கூடித்-தீயர்
ஆடினர் நாடகம் மேடையில் பாடி
போயின போயின சூழ்ச்சிகள் ஓடி-மாயப்
பொய்ம்மைகள் வீழ்ந்தன வேருடன் வாடி

ஆனிரை மேய்ந்திடும் ஆங்கொரு காடு-தன்னில்
ஆடிடும் பெண்மகள் தீங்குயிற் பேடு
வானுயர் சாரலில் தேன்விளை கூடு-கண்டு
வாயுற வாழ்த்தினள் அன்புளத் தோடு

வாழ்த்திய வாழ்த்தொலி பிள்ளையர் காது-புக்கு
வாட்டிட எண்ணினர் வேறொரு சூது
வீழ்த்திட வேண்டினர்; ஆமெனும் மாது-கல்லை
விட்டெறிந் தாள்மலைச் சாரலின் மீது