பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)191

45
குழம்பிய உலகம்

கள்ளர்கள் எல்லாம் வள்ளல்க ளென்றால்
    கண்ணியம் என்றொரு சொல்கிடையாது
கொள்ளைக ளெல்லாம் வாணிகம் ஆனால்
    குடியர சென்றிட வாயினி ஏது?

தந்நல மொன்றே வாழ்வெனக் கொண்டோர்
    தலைவர்கள் போலே வேடம ணிந்தார்
அந்நிலை ஏதும்அறிகிலர் மாந்தர்
    ஆந்தையை மாங்குயில் என்றுநி னைந்தார்.

கோழைக ளெல்லாம் நாடகம் ஆடிக்
    கூத்திடு கின்றார் வீரர்கள் போலே
தாழைகள் எல்லாந் தேக்குகள் என்றார்
    தாளங்கள் போட்டதை நம்புவ தாலே.

எருக்கிலைப் பூவைத் தெருக்களில் விற்றால்
    எத்தனை எத்தனைப் பேர்வரு கின்றார்!
மருட்கொளி போலே சூடியுங் கொண்டார்
    மல்லிகை முல்லையை ஏன்வெறுக் கின்றார்?

மிஞ்சிய காமம் மேனியிற் சாயம்
    மேவிய தொழிலைக் கலையெனச் சொன்னால்
அஞ்சிடல் அன்றி ஆறுதல் உண்டோ?
    ஆருயிர்ப் பண்புகள் அழிந்திடும் இந்நாள்.