பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)193

46
கவி மயக்கம்

ஓய்ந்து போன என்னுள்ளம்-உன்னுள்
தோய்ந்த போதுதான் இன்பம்! இன்பம்!

- ஓய்ந்து

காய்ந்து வாடுமென் வாழ்வில்-இன்பக்
காதல் நீருடன் சூழ்வாய்! சூழ்வாய்!

- ஓய்ந்து

கனவும் இல்லை நனவும் இல்லை
கானல் நீரா? அதுவும் இல்லை
மனமும் மயங்கும் மதியும் மயங்கும்
மதுதான் என்றால் அதுதான் இல்லை

- ஓய்ந்து

இரவும் இல்லை பகலும் இல்லை
இணைவிழி தாமோ உறங்கவும் இல்லை
உறவும் இல்லை பகையும் இல்லை
உளமொரு கடலோ? கரையே இல்லை

- ஒய்ந்து

விண்ணும் இல்லை மண்ணும் இல்லை
வெற்றிட மோஎனில் அதுவும் இல்லை
கண்ணில் காணாக் கற்பனை இல்லை
கவிமகள் உன்னைப் போல்பவள் இல்லை

- ஓய்ந்து

உயிரில் உணர்வாய் உணர்வில் உயிராய்
உளமெனும் அரங்கில் திருநடம் புரிவாய்
பயிரில் மணியாய் மணியுள் பயிராய்
பயில்பவ ளேநீ மருவிட வருவாய்

- ஓய்ந்து

30.9.1976