பக்கம் எண் :

196கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

49
அவளொரு காவியம்

அவளொரு புதிய காவியம்-என்றும்
அவள்தான் எனக்குயி ரோவியம்

- அவள்

கவரும் படியொரு நடையழகு-நெஞ்சில்
கலந்தே சுவைதரும் மொழியழகு-கொண்ட

- அவள்

கைவளை சிலம்புடன் சந்தங்கள் காட்டும்
காதொடு தோள்கள் அணிநலங் கூட்டும்
மெய்யெழில் வாயிதழ் வண்ணங்கள் சேர்க்கும்
மெல்லிய அவள்குரல் இன்னிசை வார்க்கும்

- அவள்

கருவிழி ஓரங் காதலைக் கண்டேன்
கனியிதழ் ஓரம் நகைஎழில் கண்டேன்
சுருள்குழல் மலரொடு தோள்களி ரண்டும்
சுமந்திடும் இடைதனில் அவலமுங் கண்டேன்

- அவள்

பால்மொழி ஊடலில் வெகுளியைக் கண்டேன்
பணிந்தபின் கூடலில் மருட்கையைக் கண்டேன்
நால்வகைக் குணங்களுள் அச்சமுங் கண்டேன்
நாணும் பொழுதொரு நாடகம் கண்டேன்

- அவள்

பயிலும் பொழுதோ நடுஇர வாகும்
பாலும் பழமும் சரிநிகராகும்
துயிலும் பொழுதோ ஒருசிறி தாகும்
தொடரும் சுவையோ மிகப்பெரி தாகும்

- அவள்

18.11.1976


நகை, அவலம், வெகுளி, மருட்கை, அச்சம் முதலிய காப்பியச் சுவைகள் சுட்டப்படுகின்றன.