பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)197

50
இசை மயக்கம்

இசையால் மயங்கும் மயக்கம்-அதனை
எதுதான் உலகில் நிகர்க்கும்

- இசையால்

கசியா மனமுங் கசியும்-முன்பு
காணா உலகம் தெரியும் -நல்ல

- இசையால்

கள்ளின் மயக்கம் தெரியாது-சுவைத்துக்
களித்தவர் தெருவழி வரும்போது
கொள்ளும் மயக்கம் அறிவேனே-உவமை
கூற நினைத்தால் முடியாதே

- இசையால்

வானில் மதியம் நடமாட-பொதியம்
வாழும் தென்றல் இசைபாடத்
தேனின் மொழியாள் உறவாட - வந்து
சேரும் மயக்கம் நிகராமோ?

- இசையால்

19.11.1976