பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)201

53
தானே வருவாள்

எனக்கொரு காதலி இருக்கின்றாள்-அவள்
ஏனழைத் தால்வர மறுக்கின்றாள்?
மனத்துட னாஅவள் வெறுக்கின்றாள்?-இல்லை
மணந்திட வேஉளந் துடிக்கின்றாள்

சாற்றைத் தரவே கனியோடு
தானே வருவாள் கனிவோடு
காற்றில் மிதப்பேன் அவளோடு
கண்ணில் மூடும் இமையோடு

ஆடகப் பொன்னின் சிலம்போசை
அடடா மேகலை தரும்ஒசை
நாடகம் ஆடும் வளையோசை
நாடொறும் கூடும் எனதாசை

†போதை என்பது விதையாகும்
புலமை என்பது மழையாகும்
காதல் என்பது வயலாகும்
கவிதை என்பது பயிராகும்

25.11.1976


† போதை - தன்னை மறந்த நிலை