பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)203

55
யார் பொறுப்பார்?

(நெருக்கடி நிலையிற் பாடியது.)

அன்றொரு காவியம் ஆக்கி வைத்தேன் - அதில்
ஆயிரம் கற்பனை தேக்கி வைத்தேன்
இன்றொரு பாடலை ஆக்குகின்றேன்-மன
ஏக்கத்தை நானதில் தேக்குகின்றேன்

செந்தமிழ் வாழ்ந்திடச் சொல்லிவைத்தேன் -அதில்
செய்வன யாவையும் அள்ளி வைத்தேன்
வந்தது வாழ்வெனப் பாடிநின்றேன்-இன்று
வந்தது கண்டுளம் வாடுகின்றேன்

காவியம் பற்றியே தூற்றுகின்றார்-கொடுங்
காரியம் என்னென்ன ஆற்றுகின்றார்
நாவினை எப்படி மாற்றுகின்றார்-அட!
நாட்டினில் பொய்ம்மையை ஏற்றுகின்றார்

கற்பனை யாவையும் யாரழித்தார்?- அந்தக்
காவிய ஏட்டினை யாரெடுத்தார்?
பற்பலர் போற்றிடப் பேரெடுத்த-அந்தப்
பாக்களை மாற்றிடின்யார் பொறுப்பார்

26.11.1976