பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)205

57
ஐந்து பூதம்

நீரும் நெருப்பும் காற்றும் வானும்
நிலமும் சேர்ந்தே உலகம தாகும்
யாரும் இவற்றைக் கூறுகள் செய்யார்
யாவும் இங்கே பொதுமையு மாகும்

என்றன் நீரென உன்றன் நீரென
எல்லைக் கோடுகள் போடுவதில்லை
கனறும் நெருப்பில் உரிமைகொண் டாடக்
கரைகள் அமைத்துக் காட்டுவதில்லை

தென்றல் கொண்டல் என்றன ரன்றித்
திரியும் காற்றைப் பிரித்தவ ரில்லை
என்றும் வானில் எல்லைக ளமைத்தே
எனதென் றிசைத்தவர் எவரும் இல்லை

அஞ்செனும் பூதமும் ஆருயிர்ப் பொதுமை
ஆயினும் மாந்தன் ஆக்கினன் புதுமை
எஞ்சிய நிலத்தில் எல்லைகள் இட்டான்
இதுதனி யுடைமை எனவிதை நட்டான்.

1.4.1982