பக்கம் எண் :

206கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

58
என்னென்ன பேசுகிறான்!

வந்த போதுதான் என்ன பேசினான்?
செல்லும் போதுதான் என்ன பேசினாள்?
வந்து வாழ்கிற போது மானிடன்
வாயில் என்னென்ன பேசுகிறான்!

மாலை கண்டதும் மேடை ஏறுவான்
வாயில் வந்ததை வாரி வீசுவான்
காலை வந்ததும் கோலம் மாறுவான்
காசுக் கென்னென்ன பேசுகிறான்!

யாரும் வாழ்ந்திடக் காணக் கூசுவான்
யாவுங் கண்டது போலப் பேசுவான்
பாரில் நேர்மையைத் தூக்கி வீசுவான்
பாவி என்னென்ன பேசுகிறான்!

கோள்கள் கூறியே சண்டை மூட்டுவான்
கொள்கை வாதியைப் போலக் காட்டுவான்
தேள்கள் வாழ்ந்திடும் நாவை நீட்டியே
தீயன் என்னென்ன பேசுகிறான்!

26.11.1976