பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)207

59
ஏமாளி உலகம்

எழுதிட நம்பும் பேசிட நம்பும்
ஏமாளி உலகமடா-அதைப்
பழுதற ஆய்ந்து பார்த்திடத் தெரியாப்
பாழும் உலகமடா

அச்சினில் வந்தால் அதுதான் வேதம்
அப்படிப் பார்க்குமடா-சிலர்
மெச்சிட மேடை ஏறிடின் அவனை
மேலவன் ஆக்குமடா

ஒருமுறை சொன்னால் உண்மையைப் பொய்யென்
றுடனே இகழுமடா-பொய்யைப்
பலமுறை சொன்னால் மெய்யென நம்பிப்
பணிந்தே புகழுமடா

யாரது சொன்னார் ஏனது சொன்னார்
என்றே அறிவதில்லை-அட!
யாரெது சொலினும் ஆறறி வுள்ளார்
ஆடுகள் ஆகினரே

26.11.1976