பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)209

61
வாழுங் கவிஞன்

கனவுகள் காண்பான் கவிஞன்-ஆனால்
கண்விழி உறங்குவ தில்லை
நனவுகள் ஆகும் புவியில்-அவனை
நன்மைகள் தொடர்வது மில்லை

பஞ்சணை போலொரு நினைவு-அங்கே
பகலிர வெல்லாங் கனவு
நெஞ்சினில் ஊறிடுந் தினவு- அதுதான்
நீள்புகழ்க் காவியப் புனைவு

மதியொடு முகிலொடு மிதப்பான்-அந்த
மயக்கினில் நாள்பல கிடப்பான்
புதியன புனைந்திடத் துடிப்பான்-அந்தப்
போதையில் ஆயிரம் படைப்பான்

மழலைகள் பேசிடும் மதலை-காணின்
மகிழ்ந்திடும் அவனொரு மதலை
பழகிய யாழொடு குழலைக்-கேட்டால்
பாவலன் ஏழிசை நிழலே

நிறமலர் மணமுடன் குலுங்கும்-கவிஞன்
நெஞ்சொரு வண்டென மயங்கும்
பறவைக ளாயிரம் பறக்கும்-கவிஞன்
பறந்திடச் சிறகினை விரிக்கும்