பக்கம் எண் :

காவியப் பாவை21

12
வெறி வேண்டும்
-

காதல் வெறி வேண்டும் - தமிழ்ச்செல்வி
    காதல் வெறி வேண்டும் - என்றன்
பேதை மனத் திடையே - உன்றன்எழில்
    பேரொளி வீசிடவே - அந்தக்
காதல் ஒளிப் பிழம்பால் - இன்பநிலை
    கண்டு களித்திடுவேன் - இன்பப்
போதை வெறி யினிலே - வான் வெளி
    புக்குப் பறந் திடுவேன்

செல்வத் திரு மகளே! - உன்னை நான்
    சேர நினைக் கையிலே - வஞ்சம்
புல்லும் மனத் தவர்தாம் - கூடியொரு
    புன்மை தரு வாரேல் - என்றன்
மல்லல் திரு நெடுந்தோள் - பகையை
    மாற்றிப் புறங்காண - உன்றன்
முல்லை நகை காட்டிப் - போர்வெறி
    மூட்டித் தர வேண்டும்

போரில் உரம் காட்டி - உன்னை நான்
    போற்றி மலர் சூட்டி - என்றும்
வாரி நலம் பருகி - நல்லின்ப
    வாழ்வு பெற வேண்டும் - அந்த
வாரி யிடை மூழ்கிக் - கண்ட நலம்
    வாழ்த்திப் புகழ்ந் துரைத்து - நின்னைப்
பாரில் உயர்த் துதற்கே - என்நெஞ்சில்
    பாட்டு வெறி வேண்டும்.