பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)219

68
கற்பவர் செயலா?

கட்டிளங் காளையரே-உம்மைக்
    கண்டிடும் வேளையிலே
மட்டிலா வேதனையால்-உள்ளம்
    வாடிக் கலங்குகின்றேன்

நட்ட நடுத்தெருவில்-நீங்கள்
    நாலைந்து பேர்கலந்து
கட்டுக் கடங்காமல்-நின்று
    கத்திப் பிதற்றுகின்றீர்!

ஏறிய வண்டிகளில்-நீங்கள்
    ஏழெட்டுப் பேர்நெருங்கிக்
கூறும் வரிசையிலே-தோளைக்
    கோத்துத் திரிந்திடுவீர்!

பேருந்தில் ஏறிவிட்டால்-அங்கே
    பேயாட்டம் ஆடுகின்றீர்
ஆரும் வெறுத்திடவே-நீங்கள்
    ஆர்த்து முழக்குகின்றீர்!

நாடக வேடங்கள்போல்-தலையில்
    நார்முடி காட்டுகின்றீர்!
ஆடவர் பெண்டிரெனத்-தோன்றா
    ஆடையை மாட்டுகின்றீர்!