பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)221

69
நற்பணியாற்றுவோம்

நாட்டுக்கு நற்பணி யாற்றிடுவோம்-வாழ்வில்
    நல்லவர் கொள்கையைப் போற்றிடுவோம்
கூட்டத்தில் உண்மையைச் சாற்றிடுவோம்-அங்குக்
    கூறிய தைச்செயல் ஆக்கிடுவோம்

நற்கலை பற்பல நாட்டிடுவோம்-இந்த
    நானிலத் திற்புகழ் கூட்டிடுவோம்
தற்குறி என்றிலா தாக்கிடுவோம்-தீய
    தந்நலம் யாவையும் போக்கிடுவோம்

விஞ்ஞானி பற்பலர் உண்டெனவே-இங்கு
    வேண்டம்மு யற்சிகள் கண்டிடுவோம்
பொய்ஞ்ஞானப் பித்தரை வென்றிடவே-இந்தப்
    பூமிக்கு நல்வழி கண்டிடுவோம்

ஏழைமை நீக்கிடச் சூளுரைப்போம் - தீமை
    எங்கெழு மாகினும் வாளெடுப்போம்
தோழமை பாடிட யாழெடுப்போம்- மக்கள்
    துன்பங்கள் யாவையும் தூளடிப்போம்

சாதிகள் ஆக்கிய தீமைகளை-அந்தச்
    சாத்திரக் குட்டையின் ஆமைகளை
மோதித் தகர்த்திடல் தீமையிலை-நீங்கள்
    மூண்டெழு வீரினும் ஊமைகளோ?