பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)225

71
உலகம் சிரித்தது

நேர்மை யோடு வாழ்க வென்று
நீதி நூல்கள் பாடின
ஆர்வ மோடு நெஞ்சில் நாளும்
அந்த வாழ்வை நாடினேன்
    ஏட்டுப் பூச்சி என்று பேசி
    என்னை உலகம் சிரித்தது

வாயில் ஒன்றும் நெஞ்சில் ஒன்றும்
வைத்துப் பேசக் கூசினேன்
சேயின் வாழ்வு சாயும் போதும்
செம்மை ஒன்றே பேசினேன்
    பித்தன் பித்தன் என்று கேலி
    பேசி உலகம் சிரித்தது

நாட்டு வாழ்வை நச்சி நின்று
நாளும் நெஞ்சில் நாடினேன்
வீட்டு வாழ்வில் நாட்டமின்றி
வீறு கொண்டு பாடினேன்
    நாட்டுப் போக்கைச் சுட்டிக் காடடி
    நாளும் உலகம் சிரித்தது