பக்கம் எண் :

228கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

கோலத் தமிழ்மொழி உயர்ந்திட-நெஞ்சம்
    கூவிக் குரல்தரும் வளர்ந்திட
ஞாலத் தொருபகை எழுந்திடின்-அப்பகை
    நாணிப் புறமிட முழங்கிடும்

வாழத் தரையினில் பிறந்தவர்-அந்தோ
    வாடிப் புழுவென வதங்கினர்
நாளை அவர்துயர் தொலைந்திடப்-பாடல்
    நாளும் கணைகளை வழங்கிடும்

நாட்டின் தொழிலிடை முனைந்தவர்- வாழ
    நாளும் உழவுகள் புரிந்தவர்
வாட்டும் வறுமையில் உழன்றனர்-மீள
    வாளென என்கவி சுழன்றிடும்

23.6.1979