பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)229

73
நாளைய நாடு

அதோ அதோ ஒரு நாடு - கண்ணின்
அருகில் தெரிவதை நீ பாடு.

- அதோ

எத்தனை எத்தனைக் கலைகள்-அவை
அத்தனை யுந்தமிழ் மொழியில்
இத்தரை மீதினில் உலவும்- கலை
எத்தனை அத்தனை நிலவும்

- அதோ

கற்றிட வந்தனர் கலையே-வெறும்
கத்தலும் கூச்சலும் இலையே
கற்றவிஞ் ஞானியின் அலைகள்-நாடு
காத்திடும் நினைவுடன் உலவும்

- அதோ

புத்தம் புதுத்தொழில் உயரும்-அவை
பூத்துக் குலுங்கிட வளரும்
எத்திசை நோக்கினும் கதவம்-அங்கே
எப்பொழு துந்திறந் தொளிரும்

- அதோ

நாளும் உழைப்புகள் பெருகும்-கொடும்
நச்சுச் சுரண்டலும் கருகும்
பாழும் அடைப்புகள் கடியும்-மிடி
பற்றிய வெந்துயர் மடியும்