பக்கம் எண் :

232கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

மாலையில் நாணிச் சிவந்திட வருவாள்
மருளும் மாலையை மயங்கிடத் தருவாள்
சீலையென் றிரவினைத் தாங்கியே திரிவாள்
சிரித்திடச் சிரித்திட விந்தைகள் புரிவாள்

- அவளும்

செடிகொடி விரிக்கும் மலர்களிற் சிரிப்பாள்
சிதறிய மலர்களில் பஞ்சணை விரிப்பாள்
மிடிகெட உழைக்கும் தோள்களில் இருப்பாள்
மேதினி யாவும் மேம்படும் விருப்பாள்

- அவளும்

உழுபவள் கலப்பையின் முனைதனில் நடப்பாள்
உளிகொளும் சிற்பியின் விரல்களில் நடிப்பாள்
*இழைகொளும் பாவினில் அவிநயம் பிடிப்பாள்
எழுச்சிகொள் கவிஞனுக் குணர்ச்சியைக் கொடுப்பாள்

- அவளும்

24.6.1979


* நெய்யுந்தறி