பக்கம் எண் :

காவியப் பாவை25

ஈன்றெனைக் காத் தவளை - மனமே
    எங்ஙனம் நான் புகழ்வேன்
சான்றவர் மெச் சிடவே - முப்பால்
    தந்து வளர்த் தனள்தாய்
தோன்றுசங் கப் புலவர் - படைத்த
    தொட்டிலில் ஆட் டினவள்
மூன்றர சர் கதைகள் - சொல்லி
    மூள்வலி யூட் டினள்தாய்

என்றன் வய துநிலை - பருவம்
    ஏற்பவை தான் உணர்ந்தே
நன்றறி வுக் கதைகள் - நகை
    நாட்டும் பிற கதைகள்
ஒன்றிய வீ ரமுடன் - காதல்
    ஊட்டுஞ் சுவைக் கதைகள்
மின்றளிர் மே னியினாள் - சொல்லி
    மேன்மை யுறப் பணித்தாள்

மேவுக தொண் டுளமே - என்பாள்
    மேகலைக் கா தையினால்
பாவுக நீ தியென்பாள் - எங்கள்
    பாண்டியன் கா தையினால்
கோவுயர் குட் டுவனால் - வீரங்
    கொட்டி முழக் கிடுவாள்
பாவில் நகைச் சுவையாத் - தருவள்
    பாண்டவர் காதையினால்

வாழ வழி வகுத்த - திரு
    வள்ளுவன் ரா மலிங்கம்
ஆழ நெடும் புலமைக் - கம்பன்
    அவ்வை யுட னிளங்கோ
சோழரில் பாண் டியரில் - கவி
    சொன்னவர் சீத் தலையான்
தோழர்கள் என் றிவர்போல் - பலரைத்
    தொல்புகழ்த் தாய் கொடுத்தாள்