பக்கம் எண் :

32கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

ஊடிப் புலந் துநின்றாய் - என்றன்
    உள்ளம் அறிந் திலையோ?
நாடித் திரி பவனோ - வஞ்சக
    நங்கையின் கா தலுக்கே

மேலைத் திசை யுடையாள் - ஒருத்தி
    மேன்மைக் குண முடையாள்
வாலைக் கும ரியுடன் - நண்பாய்
    வாய்மொழி பே சிடுவேன்

நெஞ்சிற் கெடு தியில்லை - அவளால்
    நேர்வது நன் மையடி
வஞ்சிக் கொடி யிடையே புலவி
    வாட்டந் தவிர்ந் திடடி

நெஞ்சத் தடந் தனில்நீ - உலவும்
    நீள்சிறை அன் னமடி
வஞ்சனை இல் லையடி - நீயே
    வாழ்க்கைத் துணை வியடி

பேதை மனக் குயிலே - உன்னைப்
    பெற்றவள் இல் லையடி
ஏதுக் கடி புலவி - தமிழே
    என்னைவிட் டெங் ககல்வாய்?

காலில் சிலம் பொலிக்க - வருவாய்
    காதல் மது பருகிக்
கோலப் பெரு வெளியில் - கவி வெறி
    கொண்டு திரி வமடி

சோலை வெளியிடையே - நாம்
    சுற்றித் திரி வமடி
மாலை நிலா வரவே - தனியாய்
    மாடந் தனை யடைவோம்

அங்குநம் கூட்டுறவால் - பிறந்த
    அன்புக் குழந் தைகளை
சங்கக் கவிதை என்றே - உலகம்
    சாற்றிப் புக ழுமடி


இப்பாடல் இந்திய தேசியப் புத்தகக் குழுவினரால் (National Book Trust, India) ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.