பக்கம் எண் :

34கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

கெட்ட மொழியினைப் பேசுவது - மிகக்
    கேடு தருஞ்செயல் விட்டுவிடு
சிட்டு நிகர்த்திடும் என்மகனே - வரும்
    சின்ன மொழியையும் தள்ளிவிடு

சாதி சமயங்கள் என்பவரை - நண்பிற்
    சார்ந்து பழகுதல் தீமையடா
ஓதிய சங்கத்தில் உள்ளவரே - நம்மை
    ஓம்பி வளர்த்திடும் நல்லவராம்

உன்னைச் சிறியவர் ஏசுகையில் - பெற்ற
    உள்ளம் கொதிப்பதை யாரறிவார்?
முன்னைப் பெருமைகள் அத்தனையும் கொண்டு
    முன்னேறிச் செல்லுதல் வேண்டுமடா

முற்றவும் உன்திறம் ஆய்ந்துணர்ந்தே - இன்பம்
    மூழ்கித் திளைப்பவ ளாயிடினும்
பெற்ற பொழுதினும் நான்மகிழ்ந்தேன் - பிறர்
    பேசிப் புகழ்ந்துனைப் போற்றுகையில்

வந்தவள் காதலில் சிக்கியதால் - தந்தை
    வாழ்வில் மனங்கொளும் பான்மையின்றி
நொந்திடச் செய்தனர் ஆயினுமே - நன்னூல்
    நூற்று வளர்த்திடு வேன்உனையே

நின்னைப் பெறுவதற் கென்னதவம் - செய்தேன்
    நேரினில் உன்னடை கண்டவர்கள்
என்னைஓர் தக்கவள் என்றுரைத்தார் - புகழ்
    ஏற்றிட வந்தனை வாழியவே