19 எங்கள் நாடு - எடுப்பு எங்கள் நாடு வாழ்க வாழ்கவே வளர்கலை மேவும் அறிஞர்கள் சூழும்-எங்கள் முடிப்பு தனக்கென்று வாழாத நல்லவனைப் பெண்மையிங்குத் தலைநிமிர உழைத்தவனை எங்கேசென் றாலுந்தன் மனத்துள்ள கருத்தினையே சொல்பவனை மற்றவரை மதிப்பவனைக் கலியாண சுந்தரனைத் தருநாடு நூலோடும் ஏடுகளைச் செல்லோடி அழிக்காமல் நுழைந்தோடித் தேடியருள் சாமிநாதன் வளர்நாடு பாலோடு துளிநஞ்சு கலந்தாலும் தீமைஎனப் பகர்ந்தவனைத் தமிழியக்க மறைமலையைப் பெறுநாடு சிறுபிள்ளை உள்ளங்கள் சீர்திருந்த வேண்டிநலம் சேர்கவிகள் பொழிமுகிலாம் கவிமணியின் தவநாடு வரும்வெள்ளை மாந்தருக்குப் பணிவதில்லை என்றுகவி வாகைகொளும் பாரதியும் பரம்பரையும் விளைநாடு இருள்சூழ்ந்து மருள்சூழ்ந்து சமுதாயம் இருட்டறையில் எதுவுண்மை பொய்யென்றே அறியாமல் தூங்குகையில் இருள்கீழ்ந்து வெளிக்கிளம்பும் ஞாயிறென அறிவொளியை ஈந்துவந்த ஈவேராப் பெரியாரின் திருநாடு இசைவாணர் கலைவாணர் விஞ்ஞானப் பெருமக்கள் எழுத்தாளர் பெரும்புலவர் கவிவாணர் நாடுய்ய வசையில்லா வழிகாட்டும் பேரறிஞர் தமிழ்காக்க வரிந்துகட்டி முன்னிற்கும் புலிக்கூட்டம் மிகுநாடு |