21 தமிழகம் தாழ்ந்ததேன்? - எடுப்பு தமிழகமே-நம்நாடு தாழ்நிலை எய்திய தெதனாலோ? -தமிழகமே தொடுப்பு அமிழ்தெனும் தமிழ்மொழி காத்தனர் வேந்தர் அருஞ்செயல் புரிந்தனர் வாழ்ந்தனர் மாந்தர் -தமிழகமே முடிப்பு முரசொலி கேட்டால் மூண்டெழுவார்-போரில் முதுகிடப் புறப்பகை கண்டிடுவார் அரசரும் புலவரும் இணைந்திருந்தார்-இங்கே அகப்பகை எவ்விதம் புகுந்ததுவோ? -தமிழகமே தென்றல் தவழ்ந்திடும் தமிழகமே-இன்று தேய்ந்திடக் கண்டிரோம் என்றெழுந்தார் நன்றிது செய்தனர் எனமகிழ்ந்தோம்-ஆனால் நாய்க்குணம் புகுந்தது பாசறையில்! -தமிழகமே விடுதலை என்றொரு சொல்கேட்டோம்-நாட்டில் வீரமும் மானமும் உண்டென்றோம் கெடுதலைப் புரிந்திடும் வினையார் - நாடு கீழ்நிலை எய்திடச் செய்கின்றார் -தமிழகமே |